tamilnadu

img

கொரோனா கதவடைப்பும் எல்.ஐ.சி முகவர்களும்

இந்திய நாட்டின் மிகப் பெரும் நிறுவனம் எல்.ஐ.சி. சென்னை டாக்டர் சைமன் இறப்புரிமத்தை 24 மணி நேரத்திற்குள் இந்த நிறுவனம் வழங்கியபோது எல்லோரின் புருவங்களும் உயர்ந்தன. இப் பெருமை மிக்க நிறுவனத்தின் ரத்த நாளங்களாக திகழ்பவர்கள் லட்சக் கணக்கான எல்.ஐ.சி முகவர்கள். ஆனால் இந்த கொரோனா காலம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், எதிர்பார்ப்புகள் என்னென்ன? 

ஊரடங்கில் உதிர்ந்த கனவுகள்
உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா நோய் தாக்கத்தால் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 24ஆம்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. அதிலும் மார்ச் மாதம் இறுதியில் இந்த நிலை ஏற்பட்டதால் எல்ஐசி  முகவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. நிதியாண்டின் கடைசி மாத வணிகமும், வருமானமுமே அவர்களை வருடம் முழுவதும் வாழ வைக்கும். மார்ச் மாதம் முகவர்களை பொருத்தவரையில் வணிக தீபாவளி. பளபளப்பாய் வெடித்து சிதறுகிற கனவுகள் புஸ்வாணமாய் போன சோகத்தை ஊரடங்கு கொண்டு வந்தது. உடல் நலத்திற்கு ஊரடங்கு தேவைதான். ஆனால்  கொரோனா தொற்றுகிறதோ இல்லையோ, ஓர் ஆண்டிற்கான கவலை இம் முகவர்களை தொற்றிக் கொண்டு இருக்கிறது.

இந்த ஊரடங்கு அமல்படுத்திய உடன் இந்தியா முழுமையுமுள்ள  12 லட்சம் முகவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எல்ஐசி முகவர்களுக்கு மாத ஊதியமோ, தொகுப்பூதியமோ ஏதும் கிடையாது. இவர்களுக்கு வருமானம் என்பது பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரீமியத்தில் இருந்து கிடைக்கும்  கமிஷன் தொகை மட்டுமே! இப்படிப்பட்ட அசாதாரண பேரிடர் காலங்களில், தத்தம் பணியாளர்கள்,  காண்டிராக்ட் தொழிலாளர்கள் என அனைவரையும் அந்தந்த நிர்வாகமோ , காண்டிராக்ட் நிறுவனமோ  பாதுகாக்க வேண்டுமென நாடு முழுவதும் அரசு கூறி வருகிறது. ஆனால் இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களுக்கு சமூக பாதுகாப்பை கொண்டு போய் சேர்க்கிற எல்.ஐ.சி முகவர்கள் அனைவரையும் பாதுகாக்க ஓர் ஏற்பாடு இல்லை.  

பல ஆண்டுகாலங்களாக பல இலட்சம் முகவர்கள் தேனீக்கள் போன்று சிறுகச் சிறுக கொண்டு வந்த வணிகத்தின் மூலமாக இன்று எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு சுமார் 32 இலட்சம் கோடி. இந்த அசுர வளர்ச்சிக்கு முகவர்களின் பங்கு அளப்பரியது.  மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்களில் எல்.ஐ.சி யின் பங்களிப்பு மகத்தானது. இவற்றையெல்லாம் ஒவ்வொரு கதவையும் தட்டி, ஒவ்வொரு மனசையும் திறந்து கொண்டு வந்து சேர்த்தவர்கள் அல்லவா இந்த முகவர்கள்.  

8 லட்சம் பேர் பரிதவிப்பு
மேலும்  நாட்டில் கொரோனா பரவலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டவுடன் அகில இந்திய எல்.ஐ.சி முகவர் சங்கத்தின் (LICAOI) பொதுச் செயலாளர் முனைவர் பி.ஜி.திலிப் அவர்கள் இந்திய நாட்டின் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மற்றும் எல்.ஐ.சி சேர்மன் ஆகியோருக்கு மார்ச் 16  அன்றே கடிதம் எழுதியிருந்தார். அதில் கொரோனா நோய் தாக்கத்தால் முகவர்களின் புது வணிகம்,  பிரிமிய சேகரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் எல்.ஐ.சி முகவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்குமாறும் மேலும் எல்.ஐ.சி முகவர்களுக்கு வணிக நிபந்தனைகளில் சில தளர்வுகள் அளிக்குமாறும் எழுதி இருந்தார். ஆனால் நிர்வாகமோ நிவாரணத் தொகை அளிக்க முன்வராமல் கடன் முன் பணம் மட்டும் தருவதாகவும், மன்ற முகவர்களுக்கு பணப்பயனற்ற சில சலுகைகளைத் தருவதாகவும் அறிவித்தது.  மேலும்  5 ஆண்டு பணி முடித்த முகவர்களுக்கு மட்டுமே அந்த கடன் முன் பணமும் வழங்க முடியும் எனவும் அறிவித்தது.  இந்த நிபந்தனைகளால் 12 லட்சம் பேரில் 8 லட்சம் முகவர்களுக்கு கடன் முன் பணம் கூட கிடைக்கவில்லை.  பெரும்பகுதி முகவர்கள்  தவித்துக் கொண்டிருக்கின்றனர். 

மீண்டும்  கோரிக்கை
லிகாய் சங்கத்தின் அகில இந்திய தலைமை,  8 லட்சம் முகவர்களின் பாதிப்பு  நிலை குறித்து ஏப்ரல்15 அன்று  மீண்டும் எல்.ஐ.சி சேர்மனுக்கு கடிதம் எழுதியது. இப்போது உள்ள சூழ்நிலையில் மத்திய அலுவலகம் சென்று அதிகாரிகளை சந்திக்க முடியாத சூழ்நிலையில் கடிதங்களை மட்டுமே சங்கத்தினால் அனுப்ப முடிகிறது.  இந்திய நாட்டின் பொருளாதார தூணாக, உலகத்திலேயே மிக அதிகமான பாலிசிதாரர்களைக் கொண்டதாக விளங்குகிற நிறுவனத்தின் அடித்தளமாக உள்ள இந்த முகவர்களின் நிலைக்கு மத்திய அரசும்  எல்.ஐ.சி நிர்வாகமும்  இதுவரை  எந்த நிவாரணம் அளிக்காததும், கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததும் முகவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. இதனால் எல்.ஐ.சி முகவர்களின் குடும்பத்தினரது  வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஒளியேற்றுங்கள்
இந்நிலையில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது
“காடு வெளஞ்சென்ன மச்சான் -  நமக்கு கையும் காலுந்தான மிச்சம்...”
இப்படி இவர்கள் வேதனைப்படுகிற சூழல் உருவாகலாமா? இந்தியா முழுவதும் எண்ணற்ற இல்லங்களில் காப்பீட்டு ஒளி ஏற்றும் எல்.ஐ.சி முகவர் வாழ்க்கையிலும் ஒளியேற்ற வேண்டாமா? 

===எஸ்.ஏ.கலாம்===

தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர், அகிலஇந்திய முகவர் சங்கம்(லிகாய்)